Sunday, August 12, 2007

அறியாமை காலத் திருமணங்கள்

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்

அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன:

முதல் வகை:

இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்: ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவரின் மகளையோ பெண் பேசி 'மஹ்ர்' (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.

இரண்டாம் வகைத் திருமணம்:

ஒருவர் தம் மனைவியிடம், 'நீ உன் மாதவிடாயிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குக் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தரித்துக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொள்! என்று கூறிவிட்டு, அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளைவிட்டு அந்தக் கணவர் விலம் இருப்பார். அவள் உடலுறவுகொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகிறவரை கணவர் அவளை ஒருபோதும் தீண்டமாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாளெனத் தெரியவந்தால், விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவு கொள்வார். குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு 'நிகாஹுல் இஸ்திப்ளாஉ' (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.

மூன்றாம் வகைத் திருமணம்:

பத்துப்பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்து பிரசவமாம் சில நாள்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் 'நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்துவிட்டது என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) இவன் உங்கள் மகன், இன்னாரே! என்றே விரும்பிய ஒருவரின் பெயரைi அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.

நான்காம் வகைத் திருமணம்:

நிறைய மக்கள் (ஓரிடத்தில்) ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்கமாட்டாள்.

இந்தப் பெண்கள் விலைமாதுகள் ஆவர். அவர்கள் தங்களின் வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை - பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக்குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு 'அவரின் மகன்' என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்கமுடியாது.

சத்திய(மார்க்க)த்துடன் முஹம்மத்(ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டபோது இன்று மக்களின் வழக்கிலுள்ள (முதல் வகைத்) திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்.

இந்த நான்காம் வகை பழக்கவழக்கம் நம் தமிழ் நாட்டில் கூட 19ஆம் 20ம் நூற்றாண்டிலும் வழக்கத்தில் இருந்தது என்பதற்கு மலையூர் மம்பட்டியான் என்ற திரைபடம் நமக்கு சாட்சியாகும். இதை எதிர்த்தும் தந்தை பெரியார் போன்றோர் மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் களத்தில் இருந்தனர் என்பதற்கு வரலாற்றுச் சாட்சிகள் நிறைய உள்ளன.

திருமணம் என்பது

அல்லாஹ் அறிவிக்கின்றான்:
நீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும்: உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளனதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21)

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்.(அல்குர்ஆன் 2:187)


நபி (ஸல்) தெளிவாக்கினார்கள்: இவ்வுலகம் இன்பகரமானது, உலக இன்பங்களில் மிகவும் சிறப்பானது நல்ல (ஒழுக்கமான) மனைவியை அடைவதாகும். அறிவிப்பு: இப்னு உமர் (ரலி) ஆதாரங்கள்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்.


உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் ஆவார்கள். எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களை அனுபவியுங்கள். (அல்குர்ஆன் 2:223)

பெண்கள் ஆண்மக்கள் பொன்னிலும், வெள்ளியிலுமான பொற்குவியல்கள்: அடையாளமிடப்பட்ட (உயர்ந்த குதிரைகள், ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகள், சாகுபடி நிலங்கள். ஆகியவற்றின் மீதுள்ள இச்சைகள் மனிதர்களுக்கு அழகாகப்பட்டுள்ளது. இவையெல்லாம் இவ்வுலக வாழ்வின் சுகப் பொருட்களாகும். அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடமிருக்கிறது. (அல்குர்ஆன் 3:14)


நற்குணமுள்ளவர்கள் இறை நம்பிக்கையில் (ஈமானில்) முழுமையானவர்கள். தனது மனைவியிடம் நல்ல முறையில் நடப்பவர்கள் உண்மையில் நற்குணமுள்ளவர்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: திர்மிதி, முஸ்னத் அஹ்மத்.